விவசாய நாடாக விளங்கும் நமது இந்தியாவில் கால்நடைப் பராமரிப்பை கிராமப்புறங்களில்  மூலத்தொழிலாகவும், சில பிரிவினர் துணைத் தொழிலாகவும் மேற்கொண்டுள்ளனர்.
உயர்ரகப் பசுக்களைப் பராமரித்து அதிக அளவு பால் உற்பத்தியைப் பெருக்கி வருகிறோம். ஏழைகளின் பசு என்றழைக்கப்படும் வெள்ளாடு பராமரிப்பால், குறைந்த முதலீட்டில் அதிக அளவு லாபம் பெறலாம்.
ஆடுகள் பராமரிப்பதற்கு ஆகும் செலவு மற்ற கால்நடைப் பண்ணைகளின் முதலீடுகளைக் காட்டிலும் மிகக்குறைவு. ஓர் ஆட்டிலிருந்து ஓராண்டுக்குக் கிடைக்கும் சாணமும், சிறுநீரும் அரை ஏக்கர் நிலத்துக்கு உரமாக்கப் போதுமானது. வேகமாக வளரும் தன்மையுடைய இறைச்சிக்கோழிகள் பண்ணை மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம்.
÷ஒரு தேசத்தின் மாண்பும், நற்பண்பின் வளர்ச்சியும் அந்த நாட்டின் கால்நடைகளைப் பேணுவதிலிருந்து அறிய முடியும் என மகாத்மா காந்தியடிகள் கூறியதன் மூலம் கால்நடைப் பராமரிப்பின் சிறப்பை உணர முடிகிறது.
÷பெருகிவரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்பவும், மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்பவும், அதிகரித்துவரும் மக்கள் நெருக்கடிக்கு ஏற்பவும் இப்போதைய சூழலில் விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன.
÷இந்நிலையில் மனிதனுக்குத் தேவையான இடுபொருள்களின் உற்பத்திக்கே போதுமான நிலம் இல்லையென்கிற விதத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புற்களின் உற்பத்தி மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே காலச்சூழ லுக்கேற்ப கால்நடைகளின் தீவனத்துக்கு மாற்று வகைகளை நாம் சிந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மேற்கூறியவைகளின் அடிப்படையில் கால்நடைகளுக்கு மர இலைகளைத் தீவனமாக அளிக்க நாம் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. மேய்ச்சலை மட்டுமே மையமாக வைத்து வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் புரதம் அல்லது எரிசத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கும். வறட்சி மற்றும் கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு அவை உடல் எடையை இழந்து உற்பத்தியையும் குறைக்கின்றன. இந்நிலை மாற வேண்டுமானால் கோடையிலும், பசுமை செழித்து இருக்கும் மரங்களின் இலைகளைத் தீவனமாகக்  கால்நடைகளுக்கு அளிக்க வேண்டுதல் அவசியமாகிறது.
தீவன மரங்கள் என்பது துளிர், இளம் கிளைகளுடன் கூடிய இலைகள் மற்றும் அதிலுள்ள காய்கள், பழங்கள், விதைகளை கால்நடைகளுக்குக் கொடுக்கக் கூடியனவாகும்.
÷மர இலைகளில் பொதுவாக 10 முதல் 18 சதவிகிதம் புரதச்சத்தும். சுபாபுல், அகத்தி போன்ற மரங்களின் இலைகளில் 20 முதல் 35 சதவிகிதம் புரதச்சத்தும் உள்ளது. ஆனால் ஆடு மாடுகளுக்கு எரிசத்தை அளிக்கும் நார்ச்சத்து புற்களில் இருப்பதைவிட மர இலைகளில் குறைவாக உள்ளது. மர இலைகளையே முழுத்தீவனமாக உட்கொள்ளும் ஆடு மாடுகளுக்கு எரிசத்தை அளிக்கவல்ல புற்கள், வைக்கோல் போன்றவற்றைச் சேர்த்து அளிப்பதால், மர இலைகளை உட்கொள்வதால் ஏற்படும் எரிசத்து பற்றாக்குறையைப் பெருமளவு போக்கலாம். கால்நடைகளுக்குக் கோதுமை அல்லது அரிசித் தவிட்டைத் தீவனத்தில் சேர்ப்பதால் தவிட்டில் உள்ள மணிச்சத்து மரஇலைகளில் உள்ள சுண்ணாம்புச்சத்துடன் சேர்ந்து முழுமையாகக் கால்நடைகளுக்குக் கிடைக்கும்.
÷கால்நடைகளுக்கு மரஇலைகளை மட்டும் தீவனமாக அளிக்காமல், மர இலைகளுடன் புற்கள், வைக்கோல் போன்றவற்றையும் தவிட்டையும் சேர்த்து அளித்தால் ஓரளவு சமச்சீர் தீவனம் கிடைக்கும். இதனால் அவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
பொதுவாக மாடுகளுக்கு அவை உண்ணும் தழைத் தீவனத்தில் 30 சதவிகிதம் மர இலைகளை அளிக்கலாம். நாளொன்றுக்கு 12 முதல் 15 கிலோ பசும் இலைகள் தேவைப்படும். ஆடுகளுக்கு தழைத்தீவனத்தில் 50 சதவிகிதம் வரை மர இலைகள் தேவைப்படுகின்றன. வளர்ந்த ஓர் ஆட்டுக்கு 2 முதல் 3 கிலோ மர இலைகள் நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது.
நமது பகுதிகளில் உள்ள கருவேல், வெளிவேல், வாகை, பில்லவாகை, பலா, பீனாரி, வேம்பு, பூவரசு, ஆல், அரசு, ஆயா, உத்தி, சவுண்டல், முருங்கை, கிளாசிடியா, புளி, இலந்தை, கொடுக்காப்புளி, கல்யாண முருங்கை, அகத்தி, உசிலம்,  சீமைக்கருவேல் ஆகிய மரங்கள் தீவன மரங்களாகக் கருதப்படுகின்றன.
தீவன மர இலைகளில்  டேனிக் அமிலம் உள்ளதால் முதல் ஓரிரு நாள்களுக்குச்  சரியாக உண்ணாமல் இருக்கும். பழகிய பின் நன்கு உண்ணும் திறனுடையதாக விளங்கும். ஒரு சில காரணங்களால் கால்நடைகள் சில மர இலைகளை விரும்பி உண்ணாது. அதனைப் பழக்கப்படுத்த கீழ்க்குறிப்பிட்ட சில வழிமுறைகளைக் கையாளலாம். மர இலைகளைப் பிற புற்களுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து அளித்து கால்நடைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.
காலையில் வெட்டிய இலைகளை மாலையிலும், மாலையில் வெட்டிய இலைகளை அடுத்த நாள் காலை வரையிலும் வாட வைத்து பிறகு தீவனமாக அளிக்க வேண்டும்.
மர இலைகளை நிழலில் காய வைத்து அவற்றின் ஈரப்பதத்தை சுமார் 15 சதவிகிதத்துக்கும் கீழே குறைத்துப் பின்பு தீவனமாக அளிக்க வேண்டும். மர இலைகள் மேல் சுமார் 2 சதவிகிதம் சமையல் உப்புக் கரைசலைத் தெளித்து பின்பு தீவனமாக அளிக்கலாம்.  மர இலைகளின் மீது வெல்லம் கலந்த நீரைத் தெளித்தும் தீவனமாக அளிக்கலாம்.
மர இலைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளையும், விரும்பாத கால்நடைகளையும் அருகருகே கட்டி வைத்து தீவனம் அளிக்கலாம். மர இலைகளைத் தீவனமாகக் கால்நடைகளுக்கு அளிக்கும்பொழுது தினமும் சிறு சிறு அளவில் அளித்து அவற்றைப் பழக்கப்படுத்த வேண்டும். கால்நடைகள் எப்போதும் ஒரே வகையான மர இலைகளை விரும்புவது இல்லை. ஆகையால் பல்வேறு மரங்களின் இலைகளை அளிப்பது நல்லது.
÷கால்நடைகளுக்கு மக்காச்சோளம், சோளம், தீவனக்கம்பு போன்றவை தானிய வகைகளாகவும், கம்பு, நப்பிய ர் ஒட்டுப்புல், கினியாப்புல், எருமைப்புல், கொழுக்கட்டைப்புல், தீனாநாத் புல் போன்றவை புல்வகைகளாகவும், முயல்மசால்,வேலி மசால், தீவனதட்டைப்பயிறு, ஆட்டுமசால், சங்குப்பூ போன்றவை பயிறுவகைகளாகவும் சுபாபுல், வாகை, வேம்பு, அகத்தி உள்ளிட்டவை தீவன மரவகைகளாகவும் தீவனமாக அளிக்கப்படுகின்றன.
கோடை மற்றும் வறட்சிக் காலங்களில் தீவனப்பற்றாக்குறை அதிகம் காணப்படுவதால், ஏழைவிவசாயிகள் பாதிக்கப்படுவதை கால்நடைகளுக்கு மர வகைகளைத் தீவனமாகப் பயன்படுத்தி போக்க முடியும். உடைத்த இறுங்குச் சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, கோதுமை, கொள்ளு ஆகியவற்றை மக்காச்சோளத்துக்குப்  பதிலாக 50 சதவிகிதம் வரை தீவனத்தில் அளிக்கலாம். அரிசித்தவிடு, கோதுமைத்  தவிடு, அரிசிக்குறுநொய், உளுந்து, பயிறு, கடலைப் பொட்டு ஆகிய தானிய உபபொருள்களை 50 சதவிகிதம் வரை தீவனத்தில் கலக்கலாம். கிழங்குத்திப்பி, பருத்திக்கொட்டை, ஓடு நீக்கப்பட்ட புளியங்கொட்டை ஆகிய வேளாண் கழிவுப் பொருள்களையும் கால்நடைகளின் தீவனத்தில் சேர்க்கலாம்.
கரும்புச்சோகையை பதப்படுத்தி தீவனப்பற்றாக்குறையைப் போக்கலாம். சூரியகாந்தி செடி, விதை நீக்கிய சூரியகாந்தி ஆகியவற்றைச் சிறுதுண்டுகளாக வெட்டி, கால்நடைகளுக்கு உணவாக அளிக்கலாம்.
25 கிலோ எடையுள்ள வளர்ந்த வெள்ளாட்டுக்கு நாளொன்றுக்கு 1 முதல் 1.5 கிலோ மர இலைகளை விவசாயக் கழிவுகளுடன் சேர்த்து அளித்தால் வளர்ச்சி அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 30 சதவிகிதப் புற்களுடன் 20 சதவிகிதம் மர இலைகளைச் சேர்த்து தீவனமாக அளித்தால் கன்றுகளின் வளர்ச்சி 58 சதவிகிதம் அதிகரிப்பதாகவும், 50 சதவிகிதம் வைக்கோலுடன் 40 சதவிகிதம் சுபாபுல் இலைகளைச் சேர்த்து தீவனமாக அளித்தால் கிடாரிகன்றுகளின் வளர்ச்சி 35 சதவிகிதம்  அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சித் தகவல்கள் கூறுகின்றன.





மாலை அல்லது இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்லமுறையில் உண்ணும். கடும்வெயில் நேரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. விஷச்சத்துள்ள தீவனப்பயிர்களை கால்நடைகளுக்கு தவிர்த்தல் அவசியம். தீவனத் தட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அளிப்பதால் கழிவுகள் குறையும். மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில்  மாட்டை மேய்க்கக் கூடாது. ஏனெனில் அவற்றில் உள்ள சயனிக் அமிலம் உடனடியாக இறப்பை ஏற்படுத்தும். முழு தீவனத்தையும் ஒரே நேரத்தில் அளிக்காமல் இரண்டு அல்லது மூன்று தடவைகளாகப் பிரித்து அளித்தல் வேண்டும்.
(கட்டுரையாளர்:  கால்நடை உதவி மருத்துவர் மற்றும் காவேரி பண்ணை)